Custom Search

Wednesday, April 14, 2010

வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக…… இரா.துரைரத்தினம்

வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக…… இரா.துரைரத்தினம்




இந்த தலைப்பை பார்த்ததும் சித்திரை புதுவருடத்தை கொண்டாட வேண்டாம் என சொல்லப்போகிறாரோ என உங்களில் சிலர் முகத்தை சுழித்துக்கொள்ளலாம். சித்திரை புதுவருடத்தை தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்று நான் வாதம் புரியவரவில்லை.

உங்களில் பலரைப்போல சிறுவனாக இருந்த காலத்தில் சித்திரை புதுவருடம் வருகிறது என்றால் ஒருவாரத்திற்கு முன்பே மகிழ்ச்சியில் திளைத்ததும் தமிழர்களின் வழிபாட்டு முறையின் தோற்றம் அறிந்து கொண்ட பின் பழக்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாத சராசரி மனிதனாக சித்திரை புதுவருடத்தையும் கொண்டாடி வருபவர்களில் நானும் ஒருவன்தான்.



ஆனால் சித்திரைப் பிறப்புத்தான் தமிழர்களின் புதுவருடம் என சிலர் வாதிடுவதைதான் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஜனவரி முதலாம் திகதியை புதுவருடம் என சைவக்கோவில்களில் பூசை வழிபாடு நடைபெறுகிறதோ அதே போலத்தான் பழக்கப்பட்டதன் காரணமாக அல்லது ஆரியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதன் காரணமாக சித்திரை புதுவருடத்தையும் கொண்டாடுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்.



சித்திரை புதுவருடம் தமிழர்களுக்குரியதல்ல என்றால் தமிழர்கள் ஏன் அதை கொண்டாடி வருகிறார்கள்.. எமது பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே சித்திரை வருடப்பிறப்பு என்று தானே கொண்டாடி வருகிறோம் என உங்களில் பலர் வாதிடலாம். உண்மைதான். ஆனால் எங்கள் வழிபாட்டு முறைகளும் பழக்க வழக்கங்களும் திட்டமிட்ட முறையில் எம்மை ஆதிக்கம் செய்தவர்களால் மாற்றப்பட்டிருக்கிறது என்ற வரலாறு எமக்கு போதிக்கப்படாது மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.



சித்திரை மாதம் முதலாம் திகதி இந்து சிங்கள புத்தாண்டு என்பது சரியானதுதான். இந்துக்களும் சிங்களவர்களும் கொண்டாட வேண்டிய புதுவருடத்தை திராவிடர்களான தமிழர்களும் சைவ மதத்தவர்களும் கொண்டாடுவதுதான் மடமையான விடயம்.



சித்திரைப் பிறப்பை ஆரியர்களான சிங்களவர்களும் வடஇந்தியர்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வடஇந்திய மன்னனான வாலிசமன்னன் முடிசூடிய தினத்தை வருடப்பிறப்பு என்று கொண்டாடி மகிழ்ந்தாகவும் ஒரு வரலாறு உண்டு.



ஆரிய கடவுளர்களை வழிபடும் பழக்கம் எம்மீது திணிக்கப்பட்ட பின்னர் சித்திரை புதுவருடக் கொண்டாட்டங்களும் எம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது.



பல்லவர்காலத்தில் (9ஆம் நூற்றாண்டு) ஆரிய சமய கடவுளர்களுக்கும் திராவிட கடவுளர்களுக்கும் இடையில் ஒரு சமரசம் ஏற்படுகிறது. சமரசம் என்பதை விட ஆரிய பிராமணிய திணிப்பு ஒன்று தமிழர்கள் மீது சுமத்தப்படுகிறது.



இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்டிருந்த தமிழர்கள் மீது ஆகமமுறையான வழிபாட்டு முறையும் சிவன் கணபதி போன்ற ஆரிய தெய்வங்களை தமிழர்களின் கடவுளராக கருதப்படும் முருகனுக்கும் உறவுமுறை தொடர்பை பல்லவர்கால புராணங்களில் சித்தரிக்கப்படுவதையும் காண்கிறோம்.



பல்லவர்காலத்தில் சமரசம் என்ற போர்வையில் புனையப்பட்ட இந்த புராணங்களில் கூட தமிழ் கடவுளான முருகன் ஆரியக்கடவுளரான சிவன் கணபதிக்கு தந்தை தனையனாகவே கூறப்படுகிறது. அங்கு கூட தமிழர்களின் கடவுளை தம்பி என்ற நிலையில் வைத்துதான் அவர்களால் பார்க்க முடிகிறது. சமனாக பார்க்கவில்லை. ஆகம வழிபாட்டு முறையில் முருகன் ஆலயத்தில் கூட ஆரிய கடவுளான கணபதிக்கே முதல் பூசை செய்யப்பட வேண்டும் கணபதியை வழிபட்டே எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆகம வழிபாட்டு முறையில் தமிழ் கடவுளான முருகனை வழிபட்டு காரியங்களை செய்ய வேண்டும் என சொல்லவில்லை. பெண்களின் கழுத்தில் கட்டப்படும் தாலியில் கூட கணபதியின் உருவமே பொறிக்கப்படுகிறது. ஆகமவழிபாட்டு முறையில் தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனுக்கு முதலிடம் வழங்கப்படுவதில்லை.



ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் தை முதலாம் திகதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்ட தமிழர்கள் தாம் வணங்கி வந்த தெய்வங்களில் ஒன்றான சூரிய பகவானுக்கு புதுவருடம் பிறக்கும் போது பொங்கல் இட்டு வழிபட்டு வந்த வரலாறு சிந்துவெளி குமரிநாடு ஈழம் என பரந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாக பின்பற்றி வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது.



வரலாற்றப்பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் தை முதலாம் திகதியை தமது புத்தாண்டாக கொண்டாடி வந்த போதிலும் சீனர்கள் வெள்ளையர்கள் தொடராண்டைக் கொண்டுள்ளது போல் தமிழர்களுக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு தொடர் ஆண்டு அவசியம் என்றுணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் 1921 ஆம் ஆண்டில் பச்சையப்பன் பல்கலைக் கழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் மறைமலையடிகளார் தலைமையில் கூடி திருவள்ளுவரின் பிறப்பை உறுதிசெய்து கிறிஸ்துவிற்கு முன் 21ஆண்டுகளில் திருவள்ளுவர் பிறந்து இருப்பதால் நடைமுறையாண்டுடன் கூட்டி பெறும் ஆண்டு தமிழாண்டு என்று வரையறை செய்தனர்.



இதை 1976 முதல் தமிழக அரச நாட்காட்டிகளிலும் இடம்பெறச்செய்தனர். தை முதலாம் திகதியே தமிழ் புத்தாண்டாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் விடுத்து வந்த தொடர்ச்சியான கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு 2.2.2009 இல் தமிழ் தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டமாக்கியது. கோவில்களிலும் வழிபாடு நிகழ்த்த முடியும் என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.



வியாபாரத்திற்காக வடஇந்தியாவில் குடியேறிய பாரசீகர்களின் பண்பாட்டையும் வழிபாட்டு முறைகளையும் தமிழர்கள் முறையானது என்றும் அதுவே ஒழுக்கம் நிறைந்தது என்றும் பின்பற்றி வருவதுதான் வேதனையான விடயம்.



ஆரியர்கள் தமிழர்களை மிகதரக்குறைவாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் கதைகளை புனைந்த போது அதையே தலைமேல் கொண்டு ஒழுகி வருகின்றனர். ஆரியர்கள் திராவிட மன்னான சூரனை அழித்த தினத்தை தீபாவளியாக கொண்டாடி வருவதை திராவிடர்களும் பின்பற்றி தம்மை அழித்த தினத்தை கொண்டாடி வரும் அப்பாவி இனம் தமிழர்களை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.



ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நம்மை இறுகப்பற்றிக்கொண்ட மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.



சிலர் இதை தெரியாமல் கொண்டாடி வருகின்றனர். பலர் இந்த வரலாற்றை தெரிந்து கொண்ட பின்பும் வழக்கத்தை எவ்வாறு மாற்றுவது என்ற தயக்கத்தில் உள்ளனர்.



தமிழர்கள் சைவவழிபாட்டை விட்டு இந்துவழிபாட்டிற்கு செல்ல ஆரியர்களின் சூழ்ச்சியே காரணம் . இயற்கை தெய்வ வழிபாட்டு முறைகளை கொண்ட சைவர்களான தமிழர்களை வைஸ்ணவ நாயன்மார்களும் வைஸ்ணவ ஆழ்வார்களும் சைவ வழிபாட்டு முறையை ஒழித்து இந்து வழிபாட்டு முறையை தமிழர்கள் மீது திணித்து விட்டனர். தமிழர் பண்பாட்டை அழித்த ஆரியரின் பண்பாட்டை தமது என்று சிதைந்து போன தமிழினம் தலையில்வைத்து கூத்தாடுகின்றது.



வாருங்கள்.. சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்.. தமிழர்களின் புதுவருடமாக அல்ல… எமது வழிபாடு பண்பாட்டு முறைகளை அழித்த வடஇந்திய ஆரியர்களின் புத்தாண்டாக…எமது இனத்தை அழித்த ஆரிய சிங்களவர்களின் புத்தாண்டாக….



R.Thurairatnam

thurair@hotmail.com



நன்றி :- http://www.tamilwin.com/

No comments:

Post a Comment